Resources‎ > ‎7. Articles‎ > ‎

11.Payanam Magazine- Jan' 2016
https://sites.google.com/site/sriannanswamigalmobile/resources/articles/1-the-magazine--oct-2015/Payanam%20Magazine%20for%20mobile%20website.pdf?attredirects=0&d=1


முன்னுரை

        இறைவனை நாடுபவர்கள்,பெரும்பாலும் தனது ஆரம்ப நாட்களில் பல குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். தூசி படிந்த அறையை சுத்தம் செய்ய முற்படும்போது பெரும் புழுதி கிளம்பி முன்பிருந்த வெளிச்சத்தையும் மறைப்பது போல ,ஆத்ம சாதகனுக்கு தற்காலிக இருளும்,மயக்கமும்ஏற்படுகிறது.அப்போதெல்லாம் அவனுக்கு துணை, குருவின் அரவணைப்பு மட்டுமே. குருவருளும்,இறையருளும் யாருக்கு கிடைக்கின்றதோ..அவர்பேறு பெற்றவர்.அவ்வாறு அருள் கிடைக்க ஒரு சாதகன் தன்னை தயார் படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். இறைவனே எல்லாம் செய்வான் எனக்கு, என தமோ குண தாக்கத்தில் ஒருவன் உறங்கிகொண்டிருந்தால்,மேலும் மயக்கத்தில் ஆழ்ந்து போவான்.எனவே தேடலின் தீவிரம், சரணாகதியின் அவசியம்,இறைவன் நம்மை ஆட்கொள்ளும் விதம்,குருவின் அவசியம்,குருவின் மகிமை,குருவின் அருள் இவற்றை பற்றி நன்றாக உணர்ந்து தெளிந்த மஹாத்மாக்களின் அனுபவங்களை இங்கு நாம் தருகிறோம்.இவை ஆத்ம சாதகர்களுக்கு, இறைஞான தரிசனம் என்ற பயணத்தில் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

-இணைய நிர்வாகிகள்

கண்ணனும் குசேலனும்


அண்ணனும் நானும்


- கந்தன்-   ஸ்ரீஅருணாலயம், கோமல்

( திரு கந்தன்  அவர்கள் அண்ணன் சுவாமிகளின் திருவடிகளை பற்றி வாழும் ஓர் பக்தர். பல ஆத்மார்த்தமான  அனுபவங்களை  அண்ணனின் திருவடிகளில்  அமர்ந்து பெற்றவர்கள். தனது உன்னதமான  அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள். )


இறைவனை  நோக்கி  நீ ஒரு அடி  எடுத்து வைத்தால் உன்னை நோக்கி அவன் நூறடி எடுத்து வைப்பான் என்பது பக்தி மார்க்கம் கூறும்  மிகச்சிறந்த சித்தாந்தம். இந்தக் கூற்றை நான் அண்ணனைத் தரிசித்த சில நாட்களிலேயே தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.

       வாழ்க்கையில் தொடர்ந்து வந்த பல பிரச்சனைகளினால் நான்  அல்லற்பட்டுக் கொண்டிருந்தபோது என் நண்பர் ஒருவர் விடியலுக்கு முன் விடி வெள்ளி  தோன்றுவது போல்  அந்த கற்பகத் தருவைத் தரிசிப்பதற்கு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுப்பதாகச் சொன்னார். ஆனால், காலம் ஒடிக் கொண்டிருந்ததே தவிர அதற்கான நேரம் கூடி வரவில்லை.

       "அடுத்து  முயன்றாலும் ஆகு நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா " என்பதை அண்ணனே ஒரு இரவில் பேசிக் கொண்டிருக்கும்போது, "நீங்களெல்லாம் வருவீர்கள் என்பது தெரியும். அதற்கான நேரத்தையும் நிச்சயத்திருந்தேன்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள்

       அந்த தெய்வ தரிசனம் எனக்குக் கிடைத்தது ஒரு நவராத்திரி  அமாவாசையில். என் பிரச்சனையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே  இடைமறித்து "ஒரு  பிரேக் இருக்கிறது சார். கொலு முடியட்டும்.  அதைச் சரி செய்து விடலாம்" என்று சொன்னார்கள். அடுத்து வந்த பௌர்ணமியன்று நான்கு பக்தர்களை அனுப்பி அதை எடுத்து விட்டார்கள். அது என்ன பிரேக், எப்படிச் சரி செய்தார்கள் என்பது தனிக் கதை.

    தொடர்ந்து வாரம் தவறாமல் சென்று, வந்தோமே தவிர எந்தக் குறையையும் சொல்லவில்லை. சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு திருவாருர் சந்தைப்பேட்டைக்கு அருகில் ஒரு சிறிய கடை வைப்பதற்கு  வாய்ப்பை உண்டாக்கித் தருமாறு வேண்டினோம், செய்து கொடுத்தார்கள். பின்னாளில் பிள்ளைகள் கல்வி தொடர்பாக சில அனுமதிகள் கேட்டோமே தவிர, அவர்கள் மகாசமாதியடையும் வரையும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. இனி தலைப்புக்கு  வருவோம்.

     நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த குசேலர் கதையில் வரும் ஒரு பொருள் செரிந்த பாடல்.....

        "பந்தனை அகன்ற மேலோய்

     பற்பல நாட்குப் பின்பு வந்தனை

     எனக்கென் கொண்டு வந்தனை

     அதனை இன்னே தந்தனையாயின் நன்று

     தருசுவைப் பக்கணத்தென்

     சிந்தனை நின்றதென்றான்

     தெரிவரும் வஞ்சக் கள்வன்"

     இது குசேலனிடம் கண்ணன்  கேட்டது. எப்போது? ஏன்?

     இருபத்து ஏழு குழந்தைகளை வைத்துக் கொண்டு தரித்திரத்தின் உச்சத்தில் உழன்று வருகிறார் குசேலர். கண்ணனின் உற்ற, உடனிருந்து கல்வி கற்ற, பால்ய நண்பர். அவர் மனைவி சுசீலை சொல்கிறாள். "துவாரகை மன்னன் கண்ணன்தான் உங்கள் உயிர்த் தோழனாயிற்றே, ஒரு  முறை அவரை நேரில் சந்தித்து, அன்றாடச் சோற்றுக்கே அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் நம் நிலைமைக்குத் தீர்வு காணக் கூடாதா?" என்று.

     தோழனிடத்தும் ஏழமை பேசக் கூடாது என்பது அவருடைய கொள்கை. ஆனாலும் மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியாமல்,     சென்று வருவதாக முடிவு செய்து "வெறுங்கையோடு எப்படிப் போவது?" என்று கேட்கிறார். உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்யும் அந்தப் பெண்ணிற் பெருந்தகை, வீட்டிலிருந்த சிறிது நெல்லைக் குற்றி அவலாக்கி தருகிறாள். அதைத் தன் அழுக்குத் துண்டின் முனையில் முடிந்து கொண்டு துவாரகைக்குப் புறப்படுகிறார் குசேலர்.

     அன்போடு வரவேற்ற கண்ணன் அரண்மனையின் சுகபோகங்கள் அத்தனையும் அளித்து மகிழ்விக்கிறான். புறப்படும் நேரம் வந்தது. அழுக்குத் துண்டில் முடிந்து வைத்த அவல் அப்படியே இருக்கிறது. மிக மிகச் சாமான்யமான இதை அந்தச் சக்ரவர்த்திக்கு எப்படிக் கொடுப்பது என்று இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கிறார். பக்தனின் தவிப்பு பரந்தாமனுக்குப் புரிகிறது. அந்த அற்பப் பொருளை அமுத நிலைக்கு உயர்த்துகிறான்.

    "பற்றறுத்த மேனிலை பெற்றவனே, நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு என்னைக் காணவந்த நீ வெறுங்கையோடு வரமாட்டாயே. எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய். உடனே அதைக் கொடு. என் சிந்தனை முழுவதும் நீ கொடுக்கப்போகும் பட்சணத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறது" என்கிறான். அந்த ஏழை பக்தனின் மனம் எப்படிப்பட்ட பேருவகையை அடைந்திருக்கும்?

     மேற்கண்ட பாடலின் இறுதியில் வரும் என்னை மிகவும் கவர்ந்த சொல் "தெரிவரும் வஞ்சக் கள்வன்" என்பதாகும்.  முக்காலமும் தெரிந்த வல்லவன் கண்ணன். ஆனால், எதுவுமே தெரியாதது போல் பேசுவான், நடிப்பான். இதைப் போன்ற திருவிளையாடல்களை அண்ணனிடமும் கண்டதால் அவர்களை நான் கண்ணனாகவும் வணங்குகிறேன்.

   "இன்ன தன்மையன் என்று அறியவொணா எம்மானை". இது ஆருரனைப் பற்றி சுந்தரர் புகழ்ந்து கூறியது. அண்ணனின் அருளாட்சி பரிமளிக்கும் அந்தச்  சின்னஞ்சிறு அறையில் இரவு முழுவதும் அமர்ந்து, பேசி, மகிழ்ந்து, ஆனந்தம் கொண்டிருந்த  நேரங்களில், மேலே சொன்ன தேவார வரிதான் என் நினைவுக்கு வரும். தோற்றம், உரையாடல், புன்னகை எல்லாவற்றிலும் மாற்றங்கள் தெரியும். சற்றே சலனத்தைக் கொடுக்கும் வடிவும், பரவசச் சிரிப்பும், ஞானத்தையும், யோகத்தையும் காட்டும் குமிழ் சிரிப்பும், தெரிவரும் வஞ்சக் கள்வனின் பொருள் நிறைந்த, ஆனால் குழந்தைத்தனமான புன்னகை. உள்ளமெல்லாம் குளிரக், குளிரக் கண்டு மகிழ்ந்த தன்மைகளை எழுத்தில் எப்படிச் சொல்ல முடியும்.

    வெள்ளிக்கிழமை, அண்ணனின் தரிசனத்திற்குச் செல்லும்  நாள். அறை உள்ள ஆலை வளாகத்தை நெருங்கும் போதே கமழும் பத்திகளின் நறுமணம் பரவி ஒரு புத்துணர்வை ஊட்டும். குளத்தில் இறங்கிக் குளித்துவிட்டு, உள்ளே நுழையும் போதே, மனித வடிவில் ஆஜானுபாகுவாக வீற்றிருக்கும் அந்தத் தெய்வத் திருமகன், நிமிர்ந்து  நோக்கி "வாங்க, வாங்க" என்று மலர்ந்த முகத்தோடு வரவேற்பார்கள். நாம் கொண்டு சென்ற மூன்று சிறிய பாத்திரங்கள், பத்தி, பூ, இவைகளை அவர்கள் முன் வைத்து வணங்கியதுமே ஒரு பாத்திரத்தை எடுத்துத் திறந்து பார்த்துஉடன்  வந்த  என்  மனைவியிடம்தனக்கே  உரிய பாணியில்

    "சர்க்கரைப் பொங்கலா?  இன்று வெள்ளிக்கிழமை அம்பாளுக்குச் சர்க்கரை பொங்கல் இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன், எடுத்து அங்க வைங்க சொல்றேன்" என்று பின்புறம் உள்ள படங்களை நோக்கிக் கை காட்டுவார்கள். மற்றும் இரண்டு பாத்திரங்களில் ஒன்றில் மூன்று  தோசைகளும், மற்றொன்றில் தேங்காய்ப் பாலும் இருக்கும். பத்திகளை கொடுத்து அத்தி மரத்திற்கு சென்று வணங்கி வரச் சொல்லுவார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது தேங்காய்ப் பால் பாத்திரம் மட்டும் காலியாக இருக்கும். அப்போது எதுவும் சொல்லமாட்டார்கள்.

       மீண்டும் எப்போதாவது பேசிக் கொண்டிருக்கும்போது, “எனக்கு வரும் எல்லாவற்றையும் பங்கு போட்டுக் கொள்கிறேன். ஆனால், தேங்காய்ப் பாலை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் நானே சாப்பிட்டு விடுகிறேன்" என்பார்கள். மேலே உள்ள அத்தனை நிகழ்வுகளையும் கூறும்போது அவர்களுடைய கண்களிலே தெரியும் கனிவு, பேச்சிலே தெரியும் பரிவு, அன்பு  இவைகள் எல்லாம் குசேலனின் அவலுக்குக் கண்ணன் கொடுத்த மதிப்பை விடச் சற்று கூடுதலாகத்தான் இருக்கும்.

      பக்தனுக்கு ஏதாவது அருள் செய்ய வேண்டுமென்றால்  அவனிடமிருந்து ஒரு சிறு பொருளையாவது காணிக்கையாகப் பெற வேண்டும் என்ற நியதி உள்ளதென்று எண்ணுகிறேன். அதனால்தான் பகவான் "ஒரு இலை, பூகனி அல்லது சிறிது தண்ணீரையாவது வைத்து என்னை வணங்குஎன்கிறார். நமக்கு குருதானே பகவான் . உதாரணமாக தன் பக்தர் ஒருவரிடம் ஸ்ரீ இராம கிருஷ்ணர் "இங்கு வரும்போது வெறுங்கையோடு வராதே. ஒரு காசுக்கு வெற்றிலை, பாக்காவாது வாங்கி வா" என்பார்.

      அண்ணன்  நீண்ட நாட்களுக்குப் பிறகு திருவாரூர் வந்திருந்த போது திரு.இராமமூர்த்தி அவர்களின் அழைப்பை ஏற்று பக்தர்களுடன் சேந்தமங்கலம் காளி கோவிலுக்கு சென்று விட்டுத் திரும்பி வரும் பொழுது, தன் இல்லத்திற்கு வரவேண்டுமென்று அவர் வேண்டியதால், வரும் வழியில் அங்கு சற்றுத் தங்கினார்கள். அண்ணன் வந்திருக்கும் சேதியறிந்து    இராமமூர்த்தியின் குடும்பத்தார், நண்பர்கள், பக்தர்கள் என நிறையப்பேர் கூடிவிட்டார்கள் . ஒரு தனி அறையில் அமர்ந்து எல்லாருடனும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் வெளியே உள்ள கூடத்தில் அமர்ந்திருந்தேன்.

       நான் அடிக்கடி வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவன். அது சம்பந்தமான எல்லாப் பொருள்களும் நிறைந்த ஒரு பொட்டலம் எந்த நேரமும் என் சட்டைப் பையில் இருக்கும். என்னிடம் பொட்டலம் இருக்கின்ற விஷயம் எந்த வகையிலும் அண்ணனுக்குத் தெரிய நியாயமில்லை. அவர்கள்  முன்னிலையில் எப்போதும் அதைப் பயன்படுத்த மாட்டேன். அண்ணனின் அறையில் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தவுடன் கட்டை மேல் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொள்வேன். மீண்டும் அங்கு செல்ல நேர்ந்தால்  சுத்தமாக வாயை கொப்பளித்துக் கொண்டுதான் செல்வேன். என் வாயின் சிவப்பைப் பார்த்து வெற்றிலை போடுவேன் என்பது மட்டும் தெரிந்திருக்கலாம்.

       இராமமூர்த்தியின் வீட்டிலுள்ள அறையில் எல்லோருடனும் அண்ணன் பல்வேறு செய்திகளைச் சுவையாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அண்ணனுக்குப் பணிவிடைகள் செய்வதற்காக உடன் வந்திருந்த வாழக்கரை முருகையன் என்னிடம் வந்து " அண்ணன் உங்களுடைய வெற்றிலைப் பொட்டலத்தை வாங்கி வரச் சொல்கிறார்கள்" என்று கேட்டார்.

அதிலுள்ள அத்தனையும் நான் பயன்படுத்திய மீதி அல்லவா? இதை அண்ணனுக்குக் கொடுப்பது முறையல்ல என்று எண்ணி எதிரிலுள்ள கடைக்குச் சென்று வெற்றிலை பாக்கு வாங்கி வந்து அவரிடம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு உள்ளே சென்றவர், சென்ற வேகத்திலேயே  திரும்பி வந்து "இது வேண்டாம். உங்களிடமுள்ள பொட்டலத்தை வாங்கி வரச் சொல்கிறார்கள்" என்று கேட்டார். கொடுத்தேன். சற்றுக் கழித்து திருப்பிக் கொண்டு வந்து கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். அதிலுள்ள வெற்றிலை, சீவல்,பாக்கு எல்லாம் அண்ணனால் பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்போது நான் எதையும் நினைக்கவில்லை. பல நாட்களுக்குப் பிறகு ஒரு அற்ப சந்தோஷம் வந்தது. குசேலனுக்கு அருள் செய்வதற்காக கண்ணன் அவலை வாங்கி உண்டது போல் இருக்கலாமோ? என்று.

      கண்ணன் கேட்டவுடன் அவல் மூட்டையை அவனிடம் கொடுக்கிறான் குசேலன். அதைப் பிரித்து ஒரு பிடி எடுத்து வாயில் போட்டுக் கொண்டதுதான் தாமதம், அந்தப் பக்தனுடைய குடிசை கோபுரமாகியது. அவனுடைய மனைவியும், பிள்ளைகளும் அணிந்திருந்த கிழிசல் உடைகள் பீதாம்பரமாகியது. சுருங்கச் சொன்னால், குசேலனின் குடும்ப நிலை குபேர சம்பத்தை எட்டியது. அடுத்து இன்னும் ஒரு பிடி எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போகும்போது, அருகில் இருந்த ருக்மணி சட்டென்று கையைப் பிடித்துக் கொள்கிறாள். காரணம், கொடுத்த செல்வம் போதும். மேலும் அதிகமானால், கள்ளமில்லாத அந்தப் பக்தனுடைய உள்ளம், படாடோபத்துக்கு ஆளாகிவிடக் கூடும் என்பதற்காக. 

       மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு, எங்கள் இல்லத்திற்கு வருவதற்காக அண்ணன், முருகையனுடன் இரவு 12ம் நெ. பஸ்ஸில் வந்து திருவாரூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகில் இறங்கியவர்களை, செய்தியறிந்து அங்கு வந்த ஆர்.பி.எப் செல்வராஜ், அருகிலிருந்த அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, எங்களுக்குச் சொல்லியனுப்பினார். குடும்பத்தோடு அங்கு சென்றோம். எல்லோருடனும் அண்ணன் சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். செல்வராஜிடம் வெற்றிலை, பாக்கு வாங்கி வரச் சொல்லிப் போட்டுக் கொண்டார்கள். எனக்குத் தெரிந்து அண்ணன் வெற்றிலை பாக்கு உபயோகப்படுத்துவது இது இரண்டாவது முறை. தான் போட்டுக் கொண்ட பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் வைத்து என்னிடம் நீட்டி "வெற்றிலை போடுங்க சார்" என்று அன்போடு கொடுத்தார்கள். பணிவோடு இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிப் போட்டுக் கொண்டேன். சற்று நேரம் கழித்து மறுபடியும் இரண்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் வைத்து என்னிடம் கொடுக்க வந்தார்கள். முன் போலவே இரண்டு கைகளையும் நீட்டினேன். கைகளில் கொடுக்காமல் கீழே வைத்து விட்டார்கள். இதற்கும் அப்போது எனக்குப் பொருள் விளங்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் கண்ணனின் கையை ருக்மணி பிடித்துக் கொண்டது ஞாபகம் வந்தது.

        அண்ணனின் திருவிளையாடல்களைப் புரிந்து கொள்ளும் அறிவோ, சக்தியோ எள் முனையளவும் என்னிடத்தில் இல்லை. நடந்த செயல்களெல்லாம் இப்படியும் இருக்கலாமோ? என்ற எண்ணத்தையும் அதனால் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு இனந் தெரியாத மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதற்காகவே நடைபெற்ற சில சம்பவங்களை எழுதினேன்.

        இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன தொரியுமா? குசேலன் தான் வந்த நோக்கத்தையோ, வறுமை நிலையையோ கடைசி வரை கண்ணனிடத்தில் சொல்லவே இல்லை. ஆனாலும், அவன் நிலையை மாற்றத் தானாக முன் வந்து அருள் புரிந்தான் கண்ணன். அற வழியில் நிற்கும் அந்த அந்தணன், செல்வத்தில் மட்டும்தான் தரித்திரன். ஆனால், இந்தக் கடையன் செல்வம், கல்வி, பக்தி, ஞானம் இது போன்ற எத்தனையோ வகைகளிலும் தரித்திரன். இவைகளில் ஒரு சிறிதாவது முன்னேற்றம் கொடுக்க வேண்டுமென்று அண்ணன் நினைத்திருக்கலாம்.

       அண்ணனைக் கண்ணன் என்று கூறியது மிகவும் பொருத்தமானது. ஆனால், என்னைக் குசேலனாக சொல்லிக் கொண்டது வெறும் உவமைக்காகத்தான். ஏனென்றால் அந்த தவசிரேஷ்டனுடைய பக்தியில் ஆயிரம் கோடியில் ஒரு பங்கு கூட என்னிடத்தில் இல்லை.

      அன்பு அரியணையில் வீற்றிருக்கும் அவர்களின் கருணை நிறைந்த சாம்ராஜ்யத்தில் பக்தியோடு பாதார விந்தங்களில் சரணடைந்து விட்டால் நமது தேவைகள் அளவறிந்து உரிய நேரத்தில் கேட்காமலேயே கிடைக்கும். அவர்கள் திருவாய் மலர்ந்தருளும் அபயஹஸ்த மொழியான "நான் பார்த்துக்கிறேன் சார்" என்பது ஒன்றே நமது எல்லாக் கவலைகளையும் மறக்கச் செய்து விடும்.


சரணாகதியின் அவசியம்

- திருமதி இராதை லதா வெங்கடேஷ்

 

( இவர்கள் ஓர் சிவனடியார். திருமுறைகளில் ஈடுபாடுள்ளவர். சிவப்பரம்பொருளின் திருவடிகளில் ஆழ்ந்து பல அனுபவங்களை பெற்றவர்.)

 

    ஒரு பெண்ணின் கருவில் விந்தணு  போய் விழுகிறது.இது ஒரு நிகழ்ச்சி என்றாலும் கூட, இதுவும் ஒரு சரணாகதிதான்.இந்த சரணாகதியின் முடிவுதான் பத்து மாதங்களுக்கு பிறகு முழுமையான, முழுமையாக உயிர் பெற்ற ஒரு உருவம். ஆனால் கருவை அடையாமல் அது அலைந்து திரிந்திருக்குமேயானால், முழுமைபெற்ற ஒரு உருவமாகி இருக்காது. அதுபோல்தான் மனித வாழ்க்கையின் நிலையும். பிறக்கும்முன் கருவரையில் சரணாகதி அடையும் மனிதன், பிறந்து வளர்ந்ததும் இறைவனிடம் சரணாகதி அடைந்துவிடவேண்டும். இல்லையேல்,அம்மனிதன் பிறவிக்கடலில் வீசியெறியப்படுகிறான். பக்குவப்படாத அவனது ஆன்மா,பல பிறவிகளை கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.இதற்கு முடிவு வேண்டுமெனில்,பூரண சரணாகதிதான் தீர்வு!

    அனைவரும் இறைவனின் குழந்தைகள், இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.ஏன் வந்தோம்? என்ன செய்துகொண்டு இருக்கிறோம்?நமக்காக வாழ்ந்த நாட்கள் எத்தனை? இறைவனுக்காக வாழ்ந்த நாட்கள் எத்தனை? என்ற விசாரணைகள் நமக்குள் நடக்கும் போதுதான் இறைஉணர்வு தோன்றுகிறது.அப்போதுதான் அவனை அடைய மனம் ஏங்குகிறது. இந்த ஏக்கமும் தவிப்பும் நிறைவேற ஒருவர் தேவைப்படுகிறார்.அவர்தான் ஆத்ம குரு.இறைவனின் ரகசியங்களை அறிய முற்படும்போது, நமது தேடல் முழுமையாகவும் உண்மையாகவும் இருக்குமேயானால், இறைவனே குருவை அனுப்பிவைப்பார்என ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லுகிறார்.

    இதைத்தான், “பக்தி முதிரும்போது பக்தன் தேடாவிட்டாலும் ஞானம் அவனிடம் வந்து சேர்கிறது”-என்கிறார் சுவாமி விவேகானந்தர்.கீதையில்கண்ணனோ,என்னிடம் நீங்காத பற்றுகொண்டவர்கள்,என்மீது அன்பு கொண்டு என்னையே வழிபடுபவர்கள், என்னை வந்தடையுமாறு அவர்களது புத்தியை நான் தூண்டுகிறேன்”, என்கிறார்.

    ஆன்மாவை ஊக்கிவிடும் தூண்டுசக்தி இன்னோர் ஆன்மாவிடமிருந்து வரவேண்டியுள்ளது. யாருடைய ஆன்மாவிடமிருந்து இத்தகைய தூண்டுதல் வருகிறதோ அவர்தான் குரு,ஆசிரியர். யாருடைய ஆன்மா இந்த தூண்டுதலை ஏற்கிறதோ அவர்தான் சீடர். இருவருமே தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.ஆன்மீக வாழ்வுக்கு கண்களை திறப்பவர்தான் குரு.


பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து- இட்டபிச்சையெல்லாம்

நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று- நல்மங்கையரை

தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்கும்- தாழ்வைச்சொல்லி

சேய்போல் இருப்பர் உண்மை ஞானம் தெளிந்தவரே!”


என்று பட்டினத்தார் சொல்வதுபோல் புலனின்பங்களில் பற்று இன்றி, ஆன்மதெளிவுடன் இருப்பவர்தான் உண்மையான குரு.இவரால்தான் நம்மை உயர்த்தமுடியும்.குரு உபதேசம் இல்லாமல் இறைவனை உணர முற்படுவோர் தவறான வழியில் செல்லும் நிலை ஏற்படலாம்.தன் மனதின் ஓட்டங்களை புரிந்துகொள்ள முடியாமல் நிலைதடுமாறும் தருணங்களில் குருவே நமக்கு துணை.

      இந்த பிறவியில் இரண்டு நலம் வேண்டும்.  அவை உடல்  நலம் ,உயிர் நலம்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.” என்கிறார் திருமூலர். நம் உடலுக்கு தக்க உணவு,பயிற்சி, கட்டுப்பாடு அவசியம். உயிர் நலம் பெருக அன்பு,யோகம், ஞானம் மூன்றும் வேண்டும்.இறைவனை நோக்கி செல்ல செல்ல மனம் தூய்மை அடைகிறது.

இவையெல்லாம் இறைவனை சரணாகதி அடையும் போதுதான் நடக்க தொடங்குகிறது. இறைவனை தேடும் ஆர்வம் உண்மையாக இருந்தால் அவரே குருவாக வருகிறார். தேடல் உண்மையாக இருக்கவேண்டும். இருந்தால், இந்த கலியுகத்திலும் இறைவனை தரிசிக்கலாம் என்பது அனுபவப்பூர்வமான உண்மை!

 ***************************************


சிந்தனை துளிகள்:

எல்லா தர்மங்களையும் விட ஆத்ம ஞானம் பெறுவதுதான் உயரிய ஞானம். அதுவே எல்லா விஞ்ஞானத்திலும் உயர்ந்தது.ஏனெனில் ஒருவனை இந்த ஞானம் அழியா நிலைக்கு உயர்த்துகிறது.

                                 - மனுஸ்மிருதி


  ஓர் கர்மயோகி சேவை செய்யும்போது பிரதிபலனாக அன்பையோ, பாராட்டு,நன்றி உணர்ச்சி போன்ற எதையும் யாருக்கு சேவை செய்கிறாரோ அவரிடமிருந்து எதிர்பார்க்க கூடாது.

                             - சுவாமி சிவானந்தர்.


      யாரொருவர் தனது தேவைகளை குறைத்துக்கொண்டு புலனடக்கத்துடன் இருக்கிறார்களோ அவர்களே கர்ம யோகம் செய்யமுடியும்.

                                      - சுவாமி சிவானந்தர்.


ஜபம் என்பது இறைவன்/ இஷ்ட தெய்வம்/ குரு – ன் நாமத்தையோ அல்லது வேறு மந்திரத்தையோ ஆழ்ந்த பாவனையுடனும் தூய்மையுடனும் அன்புடனும் சிரத்தையாக திரும்பச்சொல்லுதலே, இதில் மூன்று வகை உண்டு.சப்தம் வெளிப்படும் படி ஜெபித்தல்,முணுமுணுக்கும் படியாக ஜெபித்தல், அமைதியாக மனதிலேயே கூறிக்கொள்ளுதல். இதில் மானசீக ஜபம் தான் அதிக சக்தி வாய்ந்தது.மனம் கட்டுக்கடங்காமல் அலையும் போது சப்தம் வெளிப்படும்படி ஜெபிப்பது நல்லது.

                            - சுவாமி சிவானந்தர்.


மரங்களைப்போன்ற அஞ்ஞான வாழ்க்கையை விட மரணமே மேலாகும்.தோல்வியுடன் வாழ்வதை விட வீரமரணமே மேலாகும்.

                                    - சுவாமி.விவேகானந்தர்


ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவு முயற்சி செய்யாமல்,எதையாவது சாதிக்க முடியுமா? செயல்வீரனையே, சிங்கத்தை ஒத்த இதயம் உடையவனையே திருமகள் சென்றடைகிறாள். பின்னால் பார்க்க வேண்டாம், முன்னோக்கி செல்லுங்கள். எல்லையற்ற சக்தியும், எல்லையற்ற ஊக்கமும்,எல்லையற்ற தைரியமும், எல்லையற்ற பொறுமையும் நமக்கு வேண்டும். அப்போதுதான் மகத்தான விஷயங்களை சாதிக்க முடியும்

                          - சுவாமி.விவேகானந்தர்


             

                           - ஓம் தத் சத் -