ஸ்ரீ அருணாலயம்

ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகள் ஜீவ சமாதி சன்னதி


ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் சன்னதிஇயற்கை எழில் நிரம்பிய அருணாலயம்
                 அண்ணன் அவர்கள் தன் ஸ்தூல தேகத்தில் வாழ்ந்த காலத்திலேயே தனிமையை விரும்பி தன் சீடர்களுடன் கோமலுக்குச்சென்று தன் ஆத்ம சாதனைகளில் ஈடுபட விரும்பினார்கள்.இந்த விருப்பத்தை தனது பிரதான சீடரான திரு.சுவாமினாதன் அவர்களிடமும் தெரிவித்தார்கள்.

                 அரிசி ஆலையின் இயந்திர இயக்கங்களும் மேலும் தன்னை காணவரும் பக்தர்களின் சௌகரியம் கருதியும் கோமல் போன்ற போக்குவரத்து வசதிகள் அமைந்துள்ள ஒரு இடத்திற்கு அண்ணன் செல்ல விரும்பியதில் வியப்பேதும் இல்லை.ஆனால் பொருளாதார சூழ்நிலை போன்ற விஷயங்கள் சாதகமாக இல்லாததால்,அண்ணன் ஜீவ சமாதிவரை அதைச்செய்ய இயலவில்லை. 

                அண்ணன் ஜீவசமாதிக்கு பிறகு 1989 ம் ஆண்டிலேயே திரு.சுவாமினாதன் உள்ளிட்ட அண்ணனின் நேரடி சீடர்கள் பலர் கோமலில் ஆலயம் எழுப்பவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலையும் துவங்கப்பட்டது. திரு.சுவாமினாதன், அவர்களுக்கு சொந்தமான சில ஏக்கர் திடலை அண்ணனுக்கு கோயில் எழுப்ப அர்பணித்தார்கள்.பல சீடர்கள் மற்றும் பக்தர்களின் பெருமுயற்சியில் கோமலில் அண்ணனுக்கு ஒரு ஆலயம் உருவானது. ஆண்டாள்புரம் சுவாமிகளும் தனது கால்நடை பயணத்தின் போது கோமல் வந்து இவ்வாலய பணிகளை ஆசீர்வதித்தும் சென்றார்கள். இவ்விதமாக எழும்பியதுதான் ஸ்ரீ அருணாலயம்.இங்கு ஆண்டாள்புரம் சுவாமிகளும் தனது இறுதி நாட்களில் சில வாரங்கள் தங்கி சமாதி அடைந்தார்கள்.சுவாமிகளின் சமாதி பீடமும் அண்ணன் கோயிலுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது.

        இவ்விதமாக ஆண்டாள்புரம் சுவாமிகளின் ஜீவசமாதியையும் அண்ணனின் திரு உருவத்தையும் உள்ளடக்கிய அருணாலயம் இன்றும் அருள் ஊற்றாய் விளங்கி அன்பர்களுக்கு வேண்டியவற்றை தரும் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.அண்ணனின் அருகிலேயே தங்கியிருந்து அவர்களை கவனித்துக்கொண்ட அண்ணனின் பிரதான சீடரான திரு.சுவாமினாதன் அவர்கள் இந்த அருணாலயத்தில் தங்கி அண்ணனையும் சுவாமிகளையும் அடிபணிந்து இறைபணி ஆற்றி வருகிறார்கள். 1975 ம் ஆண்டில் அண்ணனை சந்தித்த நாளிலிருந்து இன்று வரை அண்ணனின் பிரதான சீடராய் இருந்து அருட்பணிகளை ஆற்றிவருகின்றார்.

        தனது குருமார்களின் சிந்தனையிலே ஒன்றி பக்தியோகமும் கர்மயோகமும் செய்துவரும் இந்த மகாத்மா, அருணாலயத்திற்கு வரும் அன்பர்களுக்கு விசேஷ தினங்களில் வேண்டிய எல்லா வசதிகளையும் செய்துகொடுத்து அருந்தொண்டு ஆற்றுகிறார்.

            டிரஸ்ட் ஒன்று உருவாக்கப்பட்டு ஆலய நிர்வாகம் சரியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.அண்ணன் மற்றும் சுவாமிகளின் விசேஷ தினங்கள் கோலகலாமாகவும் பக்தியுடனும் இங்கு கொண்டாடப்பட்டு வருகின்றது. பக்தர்களை முன் வரச்சொல்லி அபிஷேக ஆராதனைகளை அவர்கள் கைகளாலேயே அண்ணனுக்கும் சுவாமிகளுக்கும் செய்யச்சொல்லி மகிழ்கின்றார்கள் திரு.சுவாமினாதன் அவர்கள்.எளிமையும் பக்தியும் நிரம்பிய இவரது வழிநடத்தலை சிரமேற்கொண்டு கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர் பக்தர்கள் பலர்.குருபூஜை,நவராத்திரி வைபவங்களில் பல நாட்களாகவே கடுமையான விரதம் கடைபிடித்து பக்தர்களின் நலனுக்காக தவமேற்கொள்கின்றார் இவர்.

            ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருபூஜைக்கு சென்றிருந்த நாம் திரு.சுவாமினாதன் அவர்களின் எளிமையையும், வரும் பக்தர்களை இன்முகத்தோடு ஆசீர்வதித்து குழந்தையைப்போன்று மகிழ்ச்சியில் ஆழ்ந்ததையும் கண்டு வியந்தோம் நாம்.எங்களோடு அன்பாக உரையாடி அருணாலய பணியில் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் அண்ணனின் நேரடி சீடர் திரு.மோகன்ராஜ் அவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.சுவாமிகளின் குருபூஜையை தரிசித்த நாம்,அண்ணனின் திருவடியில் பராபக்தியுடன் தன்னை சமர்பித்துகொண்டு வாழும் மாமனிதர் திரு.அருணாச்சலன் அவர்களையும் சந்தித்து ஆசி பெற்றோம்.இவர் அண்ணன் மற்றும் ஆண்டாள்புரம் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கிய அருணாலய வரலாறு என்ற ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதி உலகுக்கு வழங்கியுள்ளார்கள்.அருணாலய குடும்பத்தின் அன்பையும் உபசரிப்பையும் அனுபவித்து ஆனந்தமாய் விடைபெற்றோம்.

 ஆலயத்தில் அமைந்துள்ள சன்னதிகள்:
  • தவக்கோலத்தில் அண்ணனின் திரு உருவம்
  • ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகள் ஜீவசமாதி பீடம்
தரிசன நேரம்   - 06:00 AM - 08:00 PM


விழாக்கள்-

1.     ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் பிறந்த நாள் விழா- 
பிரதி வருடம்,ஜனவரி 12 ம் தேதி .


2.     ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் குருபூஜை- பிரதி வருடம்,பிப்ரவரி 22 ம் தேதி.


3.     ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகள் குருபூஜை- பிரதி வருடம்,செப்டம்பர் 20 ம் தேதி.


முகவரி:

            ஸ்ரீ அருணாலயம்
            பிரதான சாலை,கோமல்
            திருக்காரவாசல் அஞ்சல்
            திருவாரூர்,தமிழ்நாடு
            தொலைபேசி : 04366 - 294220 / 9487521079
            
தங்கும் வசதி -
         திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் மட்டும் உள்ளது. ஆலயத்தில் தங்கும் வசதி இல்லை.