அண்ணன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு


இறைவனை அறிவது எப்படி?

            இறைவன் இந்த உலகையும் உயிர்களையும் ஏன்படைத்தான்?. பிறப்பின் நோக்கம்தான் என்ன?நாம் எங்கிருந்து வந்தோம்?எங்கே செல்கிறோம் போன்ற பல கேள்விகளை மனிதன் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்காமல் இருப்பதில்லை.இந்த தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல சாத்திரங்களையும், ஷேத்திரங்களையும் சுற்றித்திரிகின்றான் மனிதன்.அவனின் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா? அதனால் அவன் அமைதியுற்றானா? ஆனந்தம் பெற்றானா? அறிவுத்தெளிவை பெற்றானா? என்றால் அது சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கின்றது.
        “நாதன் உள்ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?” என்றார் சித்தர் ஒருவர்.இறைவனை ஒரு தத்துவ பொருளாக மட்டும் கற்று அதில் காலத்தை கழிக்காமல் இறைவனை காட்சியாய் கண்டு உணர்ந்து தெளிந்த மாகான்களின் காலடியில் அமர்ந்து, அவர்களுக்கு சேவை செய்து,அவர்களின் அருள் பெற்றால் மட்டுமே இறைவன் நமக்கு சொந்தமாவான்.நமது குழப்பங்களும் சோகங்களும் அன்றுதான் மறையும்.
        இறைவனை உணர்ந்து அனுபவிக்கும் ஞானிகளை நாம் தேடிச்சென்று சரணாகதி அடைந்து இறையானுபவத்தை பெற வேண்டும்.வாழ்வின் நோக்கம் அன்றுதான் நமக்கு புரியும்.அத்தகைய தேடல் நமக்கு இருக்கையில் இறைவன் பொதுவாக குரு வடிவில் வந்து நமக்கு அருள்கின்றான் என்பது சான்றோர்களின் அனுபவம்.இறைவன் உலகத்தை கறையேற்றும் பொருட்டு தன் சொரூபத்தின் எண்ணற்ற தன்மைகளை பல யோகிகள்,ஞானிகள்,சித்தர்கள் மூலம் வெளிப்படுத்தி பலப்பல மனிதர்களின் பக்குவத்திற்கு ஏற்றார்போல் அவர்களை வழிநடத்தி தன் பேரருளின் இரகசியத்தை உணர்த்துகின்றான்.
        இவ்வாறு “காணுக காட்டுக” என்ற சான்றோரின் வாக்குக்கு ஏற்றார் போல் இவ்வுலகில் அவதரித்து இறையானுபவம் பெற்று “என்பும் உரியர் பிறர்க்கு” என வள்ளுவரின் வாக்குபடி,அன்பும் அறிவும் வடிவாக,அருளும் தியாகமும் வடிவாக,தோற்றத்தில் சக மனிதர்களைப்போல் 52 ஆண்டுகள் வாழ்ந்து மாபெரும் அருள் ஊற்றாய் விளங்கி கேட்டவர்,கேட்பவர் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் கற்பக விருட்சமாய் உண்மையிலேயே வாழ்ந்து காட்டிய யோகிதான் நம் அருணாச்சல சுவாமிகள் என்ற புதூர் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள்.

அண்ணன் சுவாமிகளின் தோற்றமும் இளமை பருவமும்:

        ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் 1937-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள்(போகி பண்டிகை) திருநெல்லிக்காவல் அருகில் உள்ள புதூர் கிராமத்தில் திரு சக்கரபாணி திருமதி கமலாம்பாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.தம்பதியர் அக்குழந்தைக்கு அருணாச்சலம் என்று பெயரிட்டனர். அருணச்சலம் புதூரிலேயே மிகவும் வசதி படைத்த ஓர் குடும்பத்தில் அவதரித்தார்.இந்த புதூர் கிராமமானது திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் நால்ரோடு என்ற இடத்தில் இருந்து மேற்கே சுமார் 3 கிமீதொலைவில் உள்ளது.
   ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் தனது ஆரம்ப பள்ளிக்கல்வியை புதூரில் உள்ள தொடக்க பள்ளியிலேயே பெற்றார்.பின்பு 10-ம் வகுப்புக்கு சமமான பள்ளிக் -கல்வியை அரசு உயர்நிலைப்பள்ளி திருத்துறைப்பூண்டியில் பெற்றார் (Board High School -Thiruthuraipoondi).

15 ஆவது வயதில் நடந்த அற்புதம்:

        அண்ணன் சுவாமிகள் சிறு குழந்தையாக இருந்த காலத்திலேயே அவர் வீட்டிற்கு வந்தஇறையடியார் ஒருவர் குழந்தையை ஆசீர்வதித்துஅக்குழந்தையின் நாவில் எழுதிச்சென்றுள்ளார்.ஆனால் தனது 15-வது வயதில் அண்ணனுக்கு கிடைத்த தீட்சை அவரது தினசரி வாழ்வில் ஒரு பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
  தினமும் புகை வண்டியில் சென்று திருத்துறைப்பூண்டியில் இறங்கி அங்கிருந்து ஒரு நடைபாதை வழியாக பள்ளி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்ரீ அண்ணன் அவர்கள்.அவ்வாறு ஒரு நாள் வழக்கம்போல் நடைபாதையில் செல்லும்போது “அருணாச்சலம் நில்!” என்ற குரல் கேட்டு நின்றார் நம் 15 வயது நிரம்பிய அண்ணன்.ஓர் யோகி தோற்றத்தில் ஒரு பெரியவர் அப்பாதையின் ஓரத்தில் உள்ள முள்ளி ஆற்றங்கரை மயானத்தில் இருந்து வருவதை கண்டார் நம் அண்ணன் அவர்கள்.”எங்கே செல்கின்றாய்?..” என்றார் அந்த யோகி,”பள்ளிக்கு செல்கிறேன்..” என்றார் அண்ணன்,”உலகுக்கே போதிக்க போகும் உனக்கு ஏட்டுக்கல்வி எதற்கு!..” என்றார் அந்த யோகி.வியந்தார் நம் அண்ணன்.ஒரு பென்சில் கொடு என்று கேட்டு வாங்கி அண்ணனின் நாக்கில் ஏதோ சிலவற்றை எழுதினார் அந்த யோகி.”எனக்கு பசிக்கின்றது ஏதாவது சாப்பிட தருகிறாயா..” என்றார் யோகி.உடனே நம் அண்ணன் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு உணவகத்தை நோக்கி விரைந்தார்(அன்றைய மங்களாம்பிகா ஹோட்டல்)அங்கிருந்து சிற்றுண்டியை கட்டிக்கொண்டு வந்து பார்க்கையில் யோகியை அங்கு காணவில்லை,பிறகு ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கும் தேடியும் அந்த யோகி தென்படவில்லை.பராசக்தி வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் போலும்!..

அண்ணன் சுவாமிகளின் இறையானுபவ பயணம்:

        அண்ணனின் தினசரி நடவடிக்கைகள் இந்த சம்பவத்திற்கு பிறகு வெகுவாக மாறத்தொடங்கியது,தினமும் அருகில் உள்ள பிடாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு அம்மனை விளக்கேற்றி வழிபட்டார்கள்.வெளிப்புற ஆடம்பரமின்றி நுண்ணிய வழிபாடாகத்தான் அதனை அண்ணன் செய்தார்கள்.இயல்பாகவே அண்ணனுக்கு அம்பாள் வழிபாட்டில் நாட்டம் இருந்தது.
                ஒரு செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தாலும் அண்ணன் என்றுமே பணத்திலோ புகழிலோ பற்று வைத்ததில்லை.அண்ணன் அவர்களின் தந்தையார் ஒரு அரிசி ஆலை வைத்து நடத்திவந்தார்கள், சில காலம் அண்ணன் அந்த ஆலையின் நிர்வாகத்தை கவனித்தார்கள்.அப்போது நடந்த ஒரு கணக்கெடுப்பில் (Audit)சில குறைபாடுகளை கண்டு ஆலையின் சில கணக்கு புத்தகங்களை எடுத்து கொண்டு அலுவலர்கள் ஆணவத்தோடு எங்கள் அலுவலகத்துக்கு வந்து வாங்கிச்செல் என அண்ணனிடம் கூறி தங்களின் ஜீப்பில் புறப்பட்டார்கள், புதூரின் ஆற்றுப்பாலம் கூட கடக்காத நிலையில் அந்த ஜீப் நின்றுவிட்டது.பழுதின் காரணம் புரியாமல் திகைத்தனர் அலுவலர்கள்,அண்ணனின் பேரன்பையும் பேரருளையும் உணர்ந்திருந்த சில கிராம மக்கள் அந்த அலுவலர்களிடம் “பெரிய தம்பியிடம் (அண்ணனை வயது முதிர்ந்த கிராம மக்கள் அழைத்தது) புத்தகங்களை திருப்பி கொடுத்துவிட்டு வாருங்கள் ஜீப் சரியாகிவிடும்” என கூற அலுவலர்களும் அவ்வாறு செய்தனர் பின்பு ஜீப் எவ்வித சிரமமும் இன்றி ஸ்டார்ட் ஆனது.பராசக்தி தன் குழந்தையை அரவணைத்து என்றோ ஆட்கொண்டு விட்டாள் என்பது போல் இந்த அதிசய நிகழ்வு அமைந்தது.
                ஒரு மளிகை கடையும் வைத்து அண்ணன் அவர்கள் அந்த கடை வியாபரத்தையும் கவனித்தார்கள். இங்கு இருக்கையில் இயல்பாகவே கர்ம யோகமும் பக்தி யோகமும் அண்ணனுக்கு அமைந்தது.தன் தயா உணர்வினால் கேட்டவர்கெல்லாம் கடை சாமான்களை எந்த எதிர்பார்ப்புமின்றி வழங்கினார்கள்.இடையில் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இறை நாமத்தை ஜபம் செய்தும் இறை சிந்தனையில் ஆழ்ந்தும் இருந்தார்கள்.“கும்பிட்டுகிட்டே இருக்கணும்...” என்று பிற்காலத்தில் தான் இவ்விதமாக சாதகம் செய்ததை அண்ணன் தன் பக்தர்களுக்கு கூறினார்கள்.மேலும் அண்ணன் அவர்கள் ராமகிருஷ்ண பரமஹம்சர்,விவேகானந்தர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை தன் சீடர்களுக்கு கூறினார்கள்.
                  அண்ணனின் 17-வது வயதிலிருந்தே பல ஞானிகள் யோகிகள் தாமாக வந்து அண்ணனை சந்திக்க துவங்கினர்.ஆண்டாள்புரம் சுவாமிகள்,மருதூர் சுவாமிகள்,கோரம்பொட்டி சுவாமிகள்,திருச்செந்தூர் சுவாமிகள்,அதிராம்பட்டினம் சுவாமிகள்(இஸ்லாமிய) போன்றோர் அண்ணனை சந்திக்க அடிக்கடி புதூர் வந்தனர். வயதில் இளைய அண்ணனை அவரைவிட பல வயது மூத்த சித்தர்கள்,யோகிகள் பலர் பார்க்க வந்தது ஒரு வியப்பான விஷயமாகும்.
                மருதூர் சுவாமிகள் அவர்கள் பல உபாசனைகளை அண்ணனுக்கு வழங்கினார்கள்(கணபதி உபாசனை முதலிய).அண்ணன் அவர்கள் பிற்காலத்தில் தனது சீடர்களுக்கு இந்த பல உபாசனைகளை அவரவர் பக்குவத்திற்கு ஏற்றார்போல் உபதேசம் செய்து வழங்கி அவற்றில் எப்போதும் திளைத்திருக்குமாறு கூறினார்கள். இரசவாதம்(Alchemy),இயந்திர தத்துவம்(Science of yantra) போன்ற பல நுண்ணிய அறிவியல் அற்புதங்களை மருதூர் ஐயா அண்ணனுக்கு வழங்கி இருந்தும் அண்ணன் அவற்றில் எல்லாம் மூழ்கி ஆன்ம தேடலை மறந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருந்ததால் தன் சீடர்களுக்கு இவ்விஷயத்தில் ஆர்வம் காட்ட சொல்லவில்லை.
                அண்ணன் பின்பு அரிசி ஆலையில் ஒரு 10×8 அறையில் தங்க தொடங்கினார்கள்.வெளியில் செல்லும் வழக்கமும் குறைந்தது.ஆலைக்கு பின்புறமுள்ள ஒரு அத்தி மரத்தில் பராசக்தியானவள் மஹா காளி ரூபத்தில் எழுந்து அருளிருக்கின்றாள் என அண்ணனுக்கு அம்பாள் உணர்த்தி இருந்தாள்.எனவே அங்கு ஒரு சிறிய கோயில் எழுப்ப அண்ணன் விழைந்தார்கள்.அந்த அத்தி மரத்தை “அத்திமரத்து ஆச்சி” என அண்ணன் பக்தியுடன் அழைத்தார்கள்.
                தினமும் அண்ணன் அவர்கள் தனது அறையில் உள்ள தெய்வங்களுக்கு ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வழிபடும்போது அத்திமரத்து ஆச்சியையும் வழிபடுவது வழக்கமாயிற்று.பொதுவாக மாலை நேரங்களில் அண்ணன் வசிக்கும் அறை மற்றும் அத்திமரத்து ஆச்சி இருப்பிடம்,அரிசி ஆலையின் களம் இவற்றில் அருள் மனமும் ஆன்மீக ஆரவாரமும் எழும்ப துவங்கும். அண்ணனின் பக்தர்கள் மற்றும் சீடர்கள் மாலையில் ஒன்று கூடி அண்ணன் வசித்த அறைக்கு அருகில் இருக்கும் குளமே புண்ணிய தீர்த்தமாகவும் அண்ணன் மற்றும் அத்தி மரத்து ஆச்சி அம்பாளின் வெளிப்பாடாகவும் தங்களின் அனுபவத்தில் அறிந்து இந்த தினசரி மாலை கொண்டாட்டத்தில் திளைத்தனர்.இது பக்தர்கள் அனைவருக்கும் இனிய சத்சங்கமாகஅமைந்தது. ஜாதி,மதம், அறிவு,ஆற்றல் இவற்றை கடந்து ஆன்ம ஒறுமைப்பாட்டை ஒவ்வொரு பக்தருக்கும் உணர்த்தும் விதமாக நடக்கும் இந்த கொண்டாட்டம் இரவு சுமார் 3 மணி வரையும் தொடர்வதுண்டு.அரிசி மாவும் கல்யாணமுருங்கை இலையும் கலந்த கலவையில் செய்த அடையை அனைவரும் உண்டு களித்தனர்.அடையின் இலக்கணம் ஏதும் அதில் இல்லாவிட்டாலும் கூட அண்ணனின் அருளால் அந்த அடை அனைவருக்கும் சுவையானதாக அமைந்தது.தத்துவ,காதல் சினிமா பாடல்கள் அனைவரும் பாட ஹார்மோனியம்,கடம், கஞ்சிரா,மோர்சிங்போன்ற வாத்திய கருவிகள் பாடல்களுக்கு அணி சேர்க்க பக்தர்கள் அனைவரும் காதலர்கள் தங்களுள் இருக்கும் ஈர்ப்பை போன்ற ஒரு அம்பாளுடனான ஆத்மார்த்த தொடர்பை உணர்ந்து அனுபவித்தனர். ஏனென்றால் அம்பாளின் அம்சம் அதிகமாக அண்ணனிடம் வெளிப்பட்டது. அண்ணனை அனைவரும் அம்பாளாகவே வழிபட்டனர்.
                “வழக்கமாகவே தன்னை காண வரும் பக்தர்களுக்கு உணவளித்து அவர்களது பசியை போக்கி உள்ளத்தேடல்களை பூர்த்தி செய்து வந்தார்கள் அண்ணன் அவர்கள்.எத்தனை பேர் வருவார்கள் என் முன்கூட்டியே தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து அத்தனை இட்லி பொட்டலங்களை வாங்கி வரச்சொல்லி, வரும் அன்பர்களுக்கு அன்போடு உணவளித்து மகிழ்ந்தார்கள்.வெள்ளிக்கிழமை பூஜை மற்றும் நவராத்திரி பூஜை போன்ற எந்த விழாவாக இருந்தாலும் சரி யாருக்காகவும் விழாவை தாமதிக்காமல் சரியான நேரத்தில் விழாவை நடத்தி உணவு பரிமாறப்பட வேண்டும் என்பதில் தன் சீடர்களிடம் அண்ணன் கண்டிப்பாக இருந்தார்கள்” என கூறுகின்றார் அண்ணனின் சேவகனாய் தன்னை அண்ணனின் திருவடியில் சமர்பித்து வாழும் திரு.சிவப்பிரகாசம் அவர்கள் (விளமல் ஐயா). அண்ணன் இவ்வாறாக அக்கறை காட்டியதில் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அனைவரும் இறைவன் முன் சமம் என்ற உணர்வு.மற்றொன்று குழந்தைகள் பசியால் தூங்கிவிட்டால் இந்த பூஜை புனஸ்காரங்களின் பலன்தான் என்ன என்ற தெளிவு.
                    இதேபோன்று இவ்விஷயத்தில் விளமல் ஐயா அவர்கள் கவனம் செலுத்துவது வியப்பானது.தனது விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தில் (விளமல் சரணாலயம்) பிரமாண்டமான பல விழாக்களால் அண்ணனை கொண்டாடி அனைவருக்கும் அண்ணனின் அருள் கிடைக்க அயராது உழைக்கும் இவர்,ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பூஜையானலும் சரி,பிறந்தநாள்,குருபூஜை, நவராத்திரி விழாவானாலும் சரி யாருக்காகவும் அண்ணனை காக்க வைப்பதில்லை, அம்பாளாகிய அண்ணனுக்கு சரியான நேரத்தில் அபிஷேக ஆராதனைகளை பக்தியுடன் செய்து அன்பர்களை கண்டுகளிக்க வைத்து சரியான நேரத்தில் சுவையான உணவையும் பரிமாறி,வரும் பக்தர்களின் பிரச்சினைகளை அண்ணனிடம் கூறி அண்ணனின் வழிகாட்டலுக்காக சரணாகதி அடையச்சொல்லுகிறார்கள்.
                   புதூர் ஜீவ சமாதி பீடத்திலும் அண்ணனின் ஓர் சீடர், பக்தர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளையும் உணவளித்து மகிழ்கிறார்.காதடைத்து வயிற்றுப்பசியோடு ஒருவர் இருக்கையில் இறைவன், ஆன்மா போன்றவை யார் காதில் ஏறும்?.,அண்ணனின் காலடியில் இருந்து இவர்கள் போன்ற சீடர்கள் கற்றுத்தெளிந்த பண்பாடுகளை இன்றும் இவர்கள் மக்களிடம் காட்டி வருவதில் அண்ணனுக்கு பெருமை சேர்க்கின்றனர்.

அண்ணனும் ஆண்டாள்புரம் சுவாமிகளும்:

        ஆண்டாள்புரம் சுவாமிகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணக்குடியில் பிறந்தவர்கள்.பல்லாண்டுகள் அடர்ந்த காடுகளில் தவம் இருந்து இறுதியில் திருப்பூண்டி அருகில் உள்ள சிந்தாமணியில் உள்ள ஒரு திடலில் தங்கி வாழ்ந்து வந்தார்கள்.வயதில் மிகவும் முதிந்தவரான இவர்களது சரியான வயதை இவ்விடத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பல முதியோர்களாளும் கூற இயலவில்லை.ஏறக்குறைய 100 லிருந்து 130வயதுடையவர் என்று சுவாமிகள் கூறும் வரலாற்று நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது.ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்த அந்த மகான் ஓர் ஆழ்ந்த இராம பக்தரும் கூட.தன்னுடன் ஒரு ஆஞ்சனேயர் சிலையை எப்போதும் வைத்திருப்பார்கள். சில மெழுகுவர்த்திகள், தீப்பெட்டி ஒன்றும் வைத்திருப்பார்கள்.கால் நடையாகவே பல இடங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். வழியில் இருக்கும் தர்காக்கள், சிவன்,வைணவ ஆலயங்கள் கிருஸ்துவ ஆலயங்கள் இவற்றிற்கு விஜயம் செய்து சிலமணி நேரம் அவ்விடத்தில் தங்கி பின்பு தன் நடை பயணத்தை தொடர்வார்கள்.
        இந்த மகானின் இச்செயல் எம்மதமும் இறைவனை நோக்கி அழைத்துச்செல்லும் பாதைதான் என்றும் இவற்றில் ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்றும் உணர்த்துவதாகவே இருந்தது. நீர் நிலைகளை கண்டபோதெல்லாம் அவ்விடத்தில் அமர்ந்து பூஜை செய்தார்கள்.இவ்விதமாக செய்து ஆலயங்களின் சக்தியையும் நீர் நிலைகளின் தன்மையையும் மெருகேற்றி புதுப்பித்தார்கள். வேளாங்கண்ணி மாரியம்மன் கோவில்,மாதா கோவில்,நாகை சௌந்தர்ராஜ பெருமாள் கோவில்,நாகூர் தர்கா,திருமலை -ராயன்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் பல சிவன் கோவில்களை தன் கால்நடை விஜயத்தில் வழிபட்டு சென்றார்கள்.இந்த மகானின் காலடி பட்டு புத்துயிர் பெற்ற ஆலயங்கள் பல.
            பூஜை செய்ய வேண்டும் என்று தோன்றும்போது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வழிபாட்டை துவங்கிவிடுவார்கள்.வழிபாடு முடிந்த பின்னர் மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு ஆஞ்சனேயர் மற்றும் மெழுகுவர்த்தியை தன் மடியில் கட்டிக்கொண்டு நடை பயணத்தை தொடர்வார்கள்.அண்ணன் அவர்கள் பிடாரி அம்மனை வழிபட சென்ற ஒரு நாளில் ஆண்டள்புரம் சுவாமிகளும் அண்ணனும் சந்தித்து கொண்டனர். குரு சிஷ்ய உறவைத்தாண்டி ஒரு ஆத்மார்த்தமான இணைவை இருவரும் தங்களுக்குள் உணர்ந்தனர். அண்ணன் அவர்கள் சுவாமிகளை மிகப்பெரிய மகான் என்பதை அறிந்து வைத்திருந்ததோடு அதை தன் சீடர்களுக்கும் சொல்லினார்கள் அண்ணனின் சீடர்கள் அனைவரும்  சுவாமிகளிடம் அளவு கடந்த பக்தியும் அன்பும் வைத்தனர்.
       சுவாமிகளும் உள்ளன்போடு சீடர்களின் உலக/ஆன்ம தேவைகளை, தேடல்களை தன் ஆத்ம சக்தியால் பூர்த்தி செய்து கொடுத்தார்கள்.அண்ணனும் நாங்களும்–என்ற தலைப்பில் சுவாமிகளுக்கும் அண்ணனுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த உறவை பிரதிபலிக்கும் ஆடியோபதிவுகள் சில உள்ளன.அன்பர்கள் அதை கேட்டு தெளியலாம்.
         அண்ணனை நாடி வரும் பக்தர்களின் சில சூட்சும பிரச்சினைகளை அண்ணன் அவர்கள் ஆண்டாள்புரம் சுவாமிகளிடம் Refer செய்வதும் உண்டு.அண்ணனே சில பக்தர்களை அழைத்துக்கொண்டு சுவாமிகளை பார்க்க  ஆரம்ப நாட்களில் சிந்தாமணி திடலுக்கு சென்றதும் உண்டு.
                 குரு சிஷ்ய உறவில் அண்ணனும் சுவாமிகளும் சாதாரண மக்களைப் போன்று ஒருவரை ஒருவர் சந்திக்கையில் பேசிக்கொண்டதில்லை. அவர்களின் உரையாடல் ஆழ் மனதளவிலேயே மௌனமாக நடந்தது. ஆனால் இந்த இருவரும் பேசாமலேயே ஒருவரை ஒருவர் மிகச்சரியாக புரிந்து வைத்துக் கொண்டிருந்ததும் எல்லா சம்பாஷனைகளும் ஆத்ம அளவிலேயே அதிசயமாய் நடந்தேரியதும் அண்ணனின் சிஷ்யர்களுக்கு முன்னே நடந்த ஒரு அதிசயம்.இதே போன்று வரலாற்றில் ஞானிகளுக்கு இடையே பல சம்பாஷனைகள் நடந்திருக்கின்றன.சனகர், சனாநந்தர் போன்ற நால்வர் குரு தெஷ்ணாமூர்த்தி - யின் காலடியில் அமர்ந்தபோதும், டாக்டர்.பால் ப்ரன்டன் ரமண மஹரிஷியை சந்தித்த போதும்,ஞானானுபவம் மௌனத்தின் மூலமாகவே தரப்பட்டது.அண்ணன் அவர்கள் ஆண்டாள்புரம் சுவாமிகளின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர்.
    ஆனால் சுவாமிகள் அண்ணனிடம் அளவு கடந்த அன்பும்,பக்தியும் வைத்திருந்தார்கள் என்பதுதான் வியப்பான விஷயம்.புதூருக்கு சுவாமிகள் வரும் போது அண்ணன் வசிக்கும் அறையின் நிலைவாசலை சுவாமிகள் தொட்டு வணங்கியதும் ஒரு சூட்சும இரகசியம்.
    சுவாமிகளே அண்ணனை காளி என்றும் வர்ணித்ததை சீடர்கள் கேட்டிருக்கின்றனர்.அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் சுவாமிகள் விபூதி தருவதும், சுவாமிகளுக்குஉடல்நிலை சரியில்லை- யென்றால் அண்ணன் விபூதி தருவதும் வழக்கமாக இருந்தது.ஒரு காலத்தில் சுவாமிகள் அண்ணனை சந்திக்க வரும்போது தங்குவதற்கு வசதியாக அண்ணனின் அறைக்கு அருகிலேயே ஒரு குடிசை அமைக்கப்பட்டது.பிடாரி அம்மன் கோயிலில் ஆரம்பமான இந்த ஆத்மார்த்த தொடர்பு அண்ணனின் சமாதிக்கு பிறகும் தொடர்ந்தது.சுவாமிகள் கால் நடையாக புதூர் வந்து அண்ணனின் ஜீவசமாதியில் அமர்ந்து சென்றதும், பின்பு கோமலில் அண்ணனுக்காக எழுப்பப்பட்டுகொண்டிருந்த அண்ணன் திருக்கோயிலை பார்வையிட்டதும்.தனது சமாதிக்கு சில வாரங்கள் முன்பிருந்தே கோமலின் (அருணாலயம்)அண்ணன் வளாகத்தில் தங்கியதும்,அண்ணன் ஜீவ சமாதி அடைந்த ஏழு மாதங்களிலேயே தன் கடமை முடிந்தது போல் தன்னை 20.09.1989 அன்று பரமாத்மாவுடன் இணைத்துக்கொண்டதும் இறைவன் நிகழ்த்திய ஓர் அற்புதம்.
   மெத்த ஆங்கில அறிவும்,உயர்ந்த பரமாத்ம ஞானமும்,உயரிய சித்திகள் பல பெற்ற சித்தராகவும் வாழ்ந்த ஆண்டள்புரம் சுவாமிகளை திரிலோக சஞ்சாரி என்றும் குரு மார்க்க ஞானி என்றும் வர்ணிக்கின்றார் அண்ணனின் மற்றும் சுவாமியின் ஆத்மார்த்த சீடர் ஒருவர்.
        அம்பாளின் ஒரு அவதாரமான அண்ணன் என்ற ஒரு வெளிப்பாட்டை அனுக்கிரகம் செய்து அவ் அம்பாளின் அருளை வெளிப்படச் செய்து அதில் மகிழ்ந்து தனது கடைமை முடிந்தது என்று உணர்ந்து தன்னையும் பரம்பொருளுடன் இணைத்துக்கொண்டு மரணமிலா பெருவாழ்வு வாழும் ஒரு மகாத்மாவாகவே நாம் ஆண்டாள்புரம் சுவாமிகளை பார்க்கமுடிகின்றது.

அண்ணனின் தவமும் ஞானமும்:

                அண்ணன் அவர்கள் அடிக்கடி தமது அறையை மூடிக்கொண்டு பல நாட்கள்/சில மாதங்கள் ஆழ்ந்த தவத்தில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.அப்போதெல்லாம் அண்ணனுக்கு பல நேரங்களில் இதய துடிப்போ,சுவாசமோ இல்லாமல் இருந்ததை அவரது சீடர்கள் பலர் பார்த்திருக்கின்றனர்.பின்பு அண்ணன் இயல்பு நிலைக்கு தானே திரும்பி வருவதையும் கண்டிருக்கின்றனர்.
                கார்த்திகை மாதத்தில் அனைவரும் விரதம் இருப்பது வழக்கம்.பசியை தாங்க முடியாத பக்தர்களைப் பார்த்து அண்ணன் “பஜ்ஜியும் டீயும் சாப்பிட்டுக்கலாம்” என அன்போடு கூறுவார்கள். சரியை கிரியைகளின் அவசியத்தையும்,அளவையும் சரியாக அண்ணன் உணர்ந்து வைத்திருந்தார்கள்.இரவில் தனது அறையில் கம்பளம் விரித்து மலர்களை தூவி ஊதுபத்தி வாசனை பரவ அண்ணன் யாருக்கோ காத்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தர்கள். பின்பு அவ்வறையில் நுழையும் பக்தர்கள் அண்ணன் யாருடனோ உரையாடுவதையும் கண்டிருக்கின்றனர்.அந்த பக்தரின் கண்ணுக்கு எதிரேயிருக்கும் மகாத்மா தெரிவதில்லை.
                 அண்ணனுக்கு தொண்டுபுரிந்த திரு.சுவாமினாதன் அவர்களிடம் அண்ணன் ஒரு முறை இமயமலையில் இருந்து பாபாஜி என்ற ஒரு மகாத்மா இரவு வரயிருப்பதாகவும் வழியில் யாரும் படுக்க வேண்டாம் என்றும் கூறினார்கள். அதே போல் அன்று இரவு 11 மணியளவில் பாபாஜி வந்து சென்றதை திரு.சுவாமினாதன் அவர்கள் தன் ஸ்தூல கண்களால் பார்த்தார்கள்.பின்புதான் பரமஹன்ச யோகானந்தா அவர்களின் யோகியின் சுயசரிதை(Auto Biography of a yogi)என்ற புத்தகத்தில் மஹாஅவதார் பாபாஜியை பற்றி வருவதை திரு.சுவாமினாதன் அவர்கள் படித்து தெரிந்து கொண்டார்கள்.
    இவ்வாறு நடந்த அற்புதங்கள் பல. தான் புகைத்துக்கொண்டிருந்த பீடியை திரு.வேதாச்சலம் என்ற ஒரு மூத்த சிஷ்யருக்கு அண்ணன் கொடுத்து புகைக்க சொல்ல,வெகுதூரத்தில் உள்ள தனது வீட்டில் நடக்கும் சம்பவம் அப்படியே திரைப்படம் போல் திரு.வேதாச்சலத்தின் கண்முன்னே காட்டியதும்,"தந்தேன் வாணியை” எனக்கூறி திரு.அனந்தநாராயணன் என்ற சிஷ்யருக்கு  ஆயக்கலைகளை கலைவாணியாக இருந்து கொடுத்ததும்,கேமராவின் வழியாக சிஷ்யர்கள் பார்க்கும் போது புடவை உடுத்திக்கொண்டு அம்பாள் கோலத்தில் தன்னை காட்டியதும், கேமராவை விலக்கிவிட்டு பார்க்கையில் யதார்த்த அண்ணனாக தன்னை காட்டியதும்,வெளியில் சென்று பார் என சில சிஷ்யர்களை கூறி அவர்களுக்கு வெளியில் நிற்கும் நபர்கள் அனைவரையும் அர்த்தநாரீஸ்வரர் உருவங்களாக காட்டியதும்,எங்கோ வெகு தொலைவில் நடக்கவிருந்த சிஷ்யரின் சொந்தக்காரரின் தற்கொலையை தடுத்ததும்,மரணத்தைவிட கொடுமையான வியாதியில் அவதியுற்ற பல அன்பர்களின் உடல்,உள்ள நோய்களை அகற்றி ஆறுதல் அளித்ததும்,குடிசையில் வாழ்ந்த பல பக்தர்களின் வீட்டிற்கு விஜயம் செய்த மாத்திரத்தில் அவர்கள் வீடெல்லாம் சில காலங்களில் ஒட்டுக்கட்டிடமும்(Rc Building) செழிப்புமாக மாறியதும்,வேலையில்லை என கூறிவந்த பக்தர்களை வேலையில் அமர்த்தியதும்,இன்னும் எத்தனையோ, வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் முறையில் நடத்திய சித்துக்கள் எல்லாம் அண்ணன் அவர்கள் மாபெரும் இறைசக்தி படைத்த ஒரு அதிகார புருஷர் என்பதை உணர்த்துவதாகவே அமைந்தன.
        நாடிவந்த பக்த்தர்களின் சிரமங்களை தான் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அண்ணன் வழங்கினார்கள். இவ்வாறு பக்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன்மூலம் அண்ணனுக்கு பல உடல் உபாதைகள் வந்துகொண்டே இருந்தன எங்கின்றனர் அண்ணனின் சீடர்கள்.
               ஒருமுறை அண்ணனுக்கு உடலில் கட்டி  என அறிந்து அன்புடன் வைத்தியம் செய்ய முனைந்து டாக்டர். திரு.நந்தகுமார் அவர்கள் அண்ணனுக்கு ஊசி போட மறு நாள் டாக்டர் அவர்களின் கண் வீங்கிவிட்டது.அதை பார்த்த அண்ணன்,”அம்பாளுக்கு ஊசி ஒத்துக்கலயா” என அன்போடு கூறினார்கள்.
                    அண்ணன் அவர்கள் தன் சீடர்களிடம் தனக்கு அம்பாள் அளித்த காட்சியை விளக்கி வேல் கம்பு அம்பாள் எனக்கூறி,அந்த தெய்வத்தாயை எல்லோரையும் வழிபடச்செய்தார்கள்.
                அட்டமா சித்திகள் அனைத்தையும் பெற்றிருந்தாலும் சிறிதளவேனும் பகட்டோ கர்வமோ இன்றி சக மனிதரைப்போல் எல்லோருடனும் பழகியதால் அனைவரும் அண்ணன் என்று அன்போடு அழைத்தார்கள். பல அவரை ஐயா எனவும் அழைத்தனர்.
                அண்ணனின் ஞானத்தின் உயரத்தை கருணையின் ஆழத்தை அவரது சீடர்கள் மற்றும் பக்தர்கள் மூலம் நாம் கேட்டுத்தெளியும் போது,மிகவும் அதிசயமான நிகழ்வு என்னவென்றால்,பெரும்பாலான பக்தர்கள் அண்ணனை பற்றி விவரிக்கையில் அவரின் அன்பையும் கருணையையும் நினைத்து கண்ணீர் விடுவதுதான்.

அண்ணனின் பக்தர்கள்/ சீடர்கள்:

                அண்ணன் சுவாமிகளை கண்டு அவரின் அன்பாலும் அருளாலும் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் பலர்.அவர்களில் சிலர் அண்ணனுடனேயே தங்கி சேவை செய்து அருள் பெற்றார்கள். பலர் அண்ணனை தன் இதயத்தில் ஏற்றி என்றும் அண்ணனின் சிந்தனையில் தம் தினசரி வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். இவர்களில் பலர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரையும் அண்ணன் இன்றும் ப்ரட்தியட்சமாக வழிநடத்தி வருவதாக இவர்கள் கூறுவதை நாம் கேட்கின்றோம்.அவர்களில்,நாம் கண்டும் கேட்டும் அறிந்த சிலர்களை கீழே குறிப்பிடுகின்றோம்.
            சுவாமி வேதாச்சலம், வேளாங்கண்ணி / பழனி மாஸ்டர், திருவாரூர்/ பேரா.அனந்தநாராயணன்,சென்னை/பக்தவத்சலம், புதூர்/சுவாமிநாதன்,(அருணாலயம்)கோமல்/சிவப்பிரகாசம்(அண்ணன் சுவாமிகள் ஆலயம்)விளமல், திருவாரூர்/அம்பிராஜகோபாலன்,திருவாரூர்/கணேசன்,புதூர்/நடராஜன்டிரைவர்,புதூர்/பக்கிரிசாமி,புதூர் /அன்புனாதன், திருமானுர்/பாலு,புதூர்/தாமோதரன், சேலம்/ நெல்லிவனம், புதூர்/காளிதாஸ்,புதூர்/டாக்டர். நந்தகுமார், கோவை/பொன்ராஜ்,கோவை/மணிவண்ணன்,அம்மையப்பன்/ராஜப்பா (Guard SRly)/ராமமூர்த்தி(ஸ்ரீ தட்சிண காளி ஆலயம்) சேந்தமங்கலம்/ஜெகநாதன் ஆசிரியர்/ சீதாராமன் குருக்கள்/வரதராஜன், எரவக்காடு/ கோவிந்தராஜன்டிரைவர்,புதூர்/வரதராஜன், வாழக்கரை/ மணி(எ)அடியார்க்கு நல்லான், திருவாரூர்/தேவதாஸ்,சென்னை/துரைசாமி அ.இ.வானொலி ,கும்பகோணம்/ சீதாராமன் Zambia/முருகையன்,திருவாரூர்/ஜெயபால், மன்னை/சிவகுமார் த/பெ தங்கவேலு (SRly)/மாதவன்,புதூர்/மூர்த்தி, புதூர்/பாஸ்கர், திருத்தங்கூர்/நெடுஞ்செழியன்,சிதம்பரம்/பால்வண்ணன் ,சிதம்பரம்/பழனி, சிதம்பரம்/ பாஸ்கரன், சிதம்பரம்/ விசாலி, சிதம்பரம்/சிவசுப்ரமணியன்,சென்னை/சேகர் சேலையூர் ,சென்னை/மங்களம், சேலையூர் சென்னை/சிவா குடும்பத்தினர் சேலையூர் ,சென்னை/அஷோக் சேலையூர், சென்னை/பி.கே.ராஜேந்திரன் விருதாச்சலம்/பிச்சுமணி, கரூர்/மாத்ருபூதம்,சென்னை/ பாண்டியன்,வல்லம்/ சோலை, திருவாரூர்/கிருஷ்ணமூர்த்தி,திருவாரூர் /ஆம்பல், திருச்சி/ஜெயந்தி, தாம்பரம்/ கணக்கு பாலகிருஷ்ணன், வடபாதிமங்கலம் / சந்தானகிருஷ்ணன் சேலையூர்,சென்னை/மதியழகன், லண்டன் /துரைசிங்கம், திருநள்ளாறு/சுந்தரமூர்த்தி, புதூர்/ அனந்தபத்மனாபன், உத்திரங்குடி/மோகன், கோவை/ நாகேந்திரன், கோவை/அருணாசலம், ஈரோடு/ சித்தார்த்தன், சென்னை/ ஜவஹர், திருவாரூர்/பாண்டியன்,புதூர்/சுந்தரராமன்,சென்னை/சிட்டிபாபு,சென்னை/ராஜேந்திரன்,மன்னை/மணி வாண்டையார்,திருவாரூர்/ராகவன்,சேலையூர் சென்னை/ பேரா.வெங்கடேஷ் புதுதில்லி/சாரதி ,புதூர்/சந்துரு ,திருவாரூர்/ கேசவன், திருவாரூர்/ராமு, திருவாரூர்.
                  இன்னும் எத்தனையோ பக்தர்கள் அண்ணனை தன் இதயத்தில் இருத்தி வாழ்ந்து வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் எங்களின் ஆத்மார்த்த வணக்கங்கள்.
    அண்ணனின் ஆத்ம சாதகங்கள் தவங்கள் எல்லாவற்றையும் இடம் மற்றும் காலம் கருதி இங்கு நம் சுருக்கமாகவே குறிப்பிட்டோம்.ஞானிகள் யோகிகளின் வாழ்க்கையை நமது சிற்றறிவால் சரியாக சீர்தூக்கி பார்க்க முடிவதில்லை.அண்ணனை சரணாகதி அடைந்து வாழும் பக்தர்கள் அனைவருக்கும் அண்ணன் இன்றும் பல அற்புதங்களை நடத்தி வருகின்றார்.இவர்களில் பலர் அண்ணன் ஸ்தூல தேகத்தில் வாழ்ந்த காலத்தில் அண்ணனை பார்க்கதவர்கள், ஜீவசமாதிக்கு பிறகு புதூர் அண்ணன் ஜீவசமாதி அதிஷ்டானத்திலும்,கோமல் அருணாலயத்திலும், விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்திலும் பக்தர்களுக்கு நடக்கும் அற்புதங்கள் பல. இவைகளை கொஞ்சம் கொஞ்சமாக படிப்பவர்களுக்கு சிரமமில்லாத வகையில் அண்ணனும் நாங்களும்  பகுதியில்–ல் வெளியிடப்படும்.

அண்ணனின் இறுதி நாட்கள்:

                அண்ணன் அவர்கள் ஜீவசமாதி அடைவதற்கு சில வருடங்கள் முன்பாகவே இவ்வுலக விவகாரங்களை விரைவில் முடித்துக்கொள்ளப் போவதாக தன் சீடர்களிடம் கூறி இருந்தார்கள்.ஆனால் சீடர்கள் அதை இயல்பாக எடுத்துக்–கொண்டார்கள். ஏனெனில் அண்ணன் கடும் தவம் இயற்றும் காலங்களில் அறையின் கதவை சாத்திக்கொண்டு உணவு ஏதும் இன்றி பல நாட்கள் வெவ்வேறு சமாதி நிலையில் திளைத்து இருந்தார்கள். சமயத்தில் இதய துடிப்பும் நாடித்துடிப்பு இன்றியும் அவரது உடல் இருக்கும். இதை பார்த்து குழப்பமடைந்த சீடர்கள் பலர் கவலையொடு இருக்க, அண்ணன் சில நாட்களில் திரும்பவும் தன் யதார்த்த நிலைக்கு திரும்பி வருவது அங்கு வழக்கமாக நடக்கும் ஒன்று.ஆனால் இம்முறை அண்ணன் ஒரு அக்னி குண்டத்தை ஏற்படுத்தச்செய்து அதன் அருகில் அக்னியின் உஷ்ணம் படும்படியாக அமர்ந்தும் நின்றும் இருந்தார்கள்.
                சிலம்பாட்டம் போன்ற தற்காப்புகலைகளில் தேர்ச்சிபெற்ற அண்ணனின் கடின தேகம் தீயினால் சிறிது சிறிதாக கரைந்தது.பக்தர்கள் அனைவரும் தங்களை தாயாக காத்து நின்ற அண்ணனின் இந்த தவம் குறித்து கவலைப்பட்டனர்.ஆண்டாள்புரம் சுவாமிகளிடம் சென்று அண்ணனின் இந்த அக்னி தவத்தை பற்றி அன்புடன் முறையிட்டனர்.சுவாமிகளோ அண்ணனின் இந்த தவத்தின் சூட்சுமத்தை அறிந்து,வந்த பக்தர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்.
                இவ்விதமாக1988-ல் நவராத்திரிக்கு பிறகு தொடங்கிய இந்த தவம் அண்ணனின் ஜீவசமாதி வரை தொடர்ந்தது.1989-ல் வந்த போகிப்பண்டிகையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அண்ணன் அவர்கள் கலந்துகொண்டார்கள்.பேரண்ட பெருவெளியில் திளைத்த தம் அறிவுடன் அண்ணன் அவர்கள் சுமார் நான்கு மணியளவிலேயே அறைக்கு வெளியே வந்து ஓர் சுவற்றின் மீது கைகளை ஊன்றி நின்று கொண்டே இருந்தார்கள். அண்ணனின் உணர்வு வியாபக உணர்வாக இருந்ததால் அங்கு நடக்கும் விழா ஆர்பாட்டத்தில் அண்ணனின் கவனம் செல்லவில்லை,இவ்வாறாக இரவு 10 மணி வரை அண்ணன், இறை உணர்வுடன் நின்று கொண்டே இருந்தார்கள்.பின்பு அண்ணனின் கவனத்தை ஈர்க்கும் வகையில், எல்லோரும் பசியோடு காத்துக் -கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு 10 நிமிடம் அறையில் வந்து உட்காருங்கள் போதும் வணங்கி முடித்துவிடுவார்கள் என்றும் அண்ணனின் முக்கிய சீடர்கள் ஒருவர் கூற அதை கேட்டவுடன் மெதுவாக தனது வழக்கமான இடத்தில் வந்து அண்ணன் அமர்ந்தார்கள், அண்ணனுக்கு மாலை அணிவித்து சாம்பிராணி போட்டு அனைவரும் வணங்கினர்,அதற்குபின் அண்ணன் கதவை சாத்திக்கொண்டார்கள்.இவ்வாறாக நாட்கள் நகர்ந்தன.
                1989-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் நாள் புதன் கிழமை வழக்கம் போல் பொழுது புலர்ந்தது,அண்ணன் வழக்கம் போல் அக்னியின் முன் நின்று கொண்டிருந்தார்கள்.பால்வண்ணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் ஏதோ டிராக்டர் வாங்கும் விஷயமாக திருவாரூர் சென்றிருந்தார்கள்.டாக்டர் திரு.நந்தகுமார் அவர்களின் மைத்துனர் நாகேந்திரன் அனுப்பிய மணியாடரை அண்ணன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார்கள்.அனந்தபத்மனாபன் அவர்கள் அவ்வளாகத்தில் இருந்தார்கள். திரு.சுவாமினாதன் அவர்கள் அண்ணணின் தேவைகளை கவனித்துவிட்டு சுவாமிகளின் குடிசைக்கு சென்றார்கள்.ரைஸ்மில் வழக்கம் -போல் ஓடிக்கொண்டிருந்தது.
                திடீரென்று அண்ணன் சீதாராமனை பார்த்து 12:30மணி பஸ் உள்ளே சென்று விட்டதா என கேட்டு பின்பு தெருவில் செல்லும் ஐஸ் வண்டி காரரிடமிருந்து ஒரு ஐஸ் வாங்கிவர சொன்னார்கள்,சீதாராமனும் ஐஸை வாங்கிவந்து அண்ணனிடம் கொடுத்து சற்றே தூரத்திற்கு சென்றார்.ஆனால் ஏதோ ஒன்று சீதாராமனுக்கு உணர்த்த உடனடியாக அண்ணனிடம் திரும்பி வந்தார் சீதாராமன்.அண்ணன் தனது நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்,கண்கள் மேலே வான் நோக்கி நிலைத்து இருந்தன,எவ்வித அசைவும் இல்லை,மின்னல் அடித்ததை போன்ற உணர்வுடன் “ஐயா..” என அலறினார் சீதாராமன்,அனைவரும் பதறி ஓடிவந்தனர்.
            டாக்டர். இப்ராஹிம் வந்து அண்ணனை பரிசோதித்தார், இருதயம் நின்றுவிட்டதை உறுதி செய்தார்.சீதாராமன் கையை வைத்து பார்க்கையில் இருதயம் ஓடியது.டாக்டர். இப்ராஹிமிடம் மறுமுறை சோதிக்க வேண்டினர்.டாக்டர்.இப்ராஹிம் சோதித்து இருதயம் நின்றுவிட்டதை கூறினார். ஆனால் சீதாராமன் கையை வைத்து பார்க்கையில் இருதயம் ஓடியது!
        இத்தனை காலம் தாயாய் இருந்து அனைவரையும் அரவணைத்து காத்த அண்ணன் ஜீவசமாதி அடைந்திருந்தார்கள்.சீடர்களும் பக்தர்களும் தங்களின் தெய்வத்தாய் தங்களை விட்டு பிரிந்த துக்கத்தில் அழுது புரண்டனர்.உலகம் வெறுமையாய் தோன்றிற்று.என்ன இனி செய்வது என சிந்திக்ககூட பலமின்றி தன் சுய உணர்வை இழந்துகிடந்தனர்.ஒருவாறு சுய நினைவுக்கு திரும்பிய பிறகு அண்ணனின் ஜீவசமாதி அடைந்த நிலையை ஒருவாறு உணர்ந்தனர். முதல் நாள் மதியம் ஜீவசமாதி அடைந்த நேரத்திலிருந்து,மறுநாள் மாலை ஜீவசமாதி பீடத்தில் அண்ணனுடைய ஸ்தூல தேகம் வைக்கப்படும் வரை தேகம் வியர்த்துக்கொண்டே இருந்ததாகவும்,அதை துணியால் துடைத்துக்கொண்டே இருந்ததாகவும் அண்ணனின் சகோதரர் உட்பட பல சீடர்கள் கூறினார்கள்.ரைஸ் மில்லின் எதிரே இருந்த அண்ணன் குடும்பத்தார்க்கு சொந்தமான மூங்கில் கொல்லையில்,அண்ணனின் ஸ்தூல தேகம் வைக்கப்பட்டு சித்த புருஷருக்கு செய்யவேண்டிய கிரியைகள் செய்யப்பட்டு, ஜீவசமாதி பீடம் எழுப்பப்பட்டது.
        பிற்காலத்தில் அது ஆலயமாக விரிவாக்கப்பட்டது. எளிமையும்,அமைதியும் நிரம்பிய அண்ணனின் ஜீவசமாதி பீடம் தரிசிப்பவர்களுக்கெல்லாம் கேட்பதை கொடுக்கும் கற்பக விருட்சமாய் இன்றும் விளங்கி வருவது ஒரு நிதர்சனமான உண்மை.

அண்ணன் இன்றும் அற்புதங்களை நடத்தி வருகின்றார்கள்

          சரணாகதி அடைந்து வாழும் பக்தர்கள் அனைவருக்கும் அண்ணன் இன்றும் பல அற்புதங்களை நடத்தி வருகின்றார்.இவர்களில் பலர் அண்ணன் ஸ்தூல தேகத்தில் வாழ்ந்த காலத்தில் அண்ணனை பார்க்கதவர்கள், ஜீவசமாதிக்கு பிறகு புதூர் அண்ணன் ஜீவசமாதி அதிஷ்டானத்திலும்,கோமல் அருணாலயத்திலும்,விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்திலும் பக்தர்களுக்கு நடக்கும் அற்புதங்கள் பல.இவைகளை கொஞ்சம் கொஞ்சமாக படிப்பவர்களுக்கு சிரமமில்லாத வகையில் அண்ணனும் நாங்களும்  பகுதியில் வெளியிடப்படும்.
     ஒரு யோகியாய்,பரிபூரணமடைந்த ஞானியாய்,அருள் ஊற்றாய் விளங்கும் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் அவர்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். உள்ளன்போடு சரணாகதி அடையும் நம்மை காத்து கரையேற்றுகின்றார்கள்.  
      
ஸ்ரீ அண்ணன் சுவாமிகளின் திருவடிகளை சரணடைவோம்!..எல்லா இன்பமும் பெற்றிடுவோம்!..